அன்பிற்கினிய சொந்தங்களே,

உங்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

குரும்பர் சமுதாயத்தைச் சேர்ந்த நம்மை குருபா, குருபர், குருபாஸ், குரும்பா, குரும்பாஸ் (குரும்பர்கள்), குரும்பன், குரும்பர், குருமா, குருமர், குருமன், குருமன்ஸ் என்று அரசின் பதிவேடுகளில் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும், நம் சமுதாயத்தினர் கவுரவத்திற்காக தங்கள் பெயருக்குப்பின்னால் “கவுண்டர்” என அடைமொழி சேர்த்துக்கொண்டதால், “குரும்பக்கவுண்டர்” என்று மேலும் ஒரு பிரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பழங்குடியினர் பட்டியலில் குரும்பாஸ் (குரும்பர்கள்) மற்றும் குருமன்ஸ் ஆகிய இரு பெயர்களையும் மற்றப் பெயர்களை பிற்படுத்தப்பட்ட & மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலிலும் அங்கீகாரம் செய்துள்ளனர். தற்போது குரும்பா, குரும்பகவுண்டர் மற்றும் குருமன்ஸ் என நாம் வழக்கத்தில் கொண்டுள்ளோம்.

தமிழகம் முழுவதும், நம் சமுதாய மக்கள் தொகை குலம்வாரியாக இதுவரை எடுக்கப்படவில்லை. இதற்கு முன்பு விபரங்களை எடுத்தவர்கள் அதை பதிவுசெய்தும் வைக்கவில்லை. ஆக நாம் தமிழகத்தில் எவ்வளவுப்பேர் வசித்து வருகின்றோம் என யாருக்கும் புள்ளிவிபரமாகச் சொல்லத்தெரியாது.

நம் சமுதாய மக்களில் யாரும் பெரிய பொறுப்புகள் வகித்தது கிடையாது. அதற்கு உண்டான சரியான முயற்சிகளில் நம்மில் யாரும் முறையாக ஈடுபட்டது கிடையாது.

நம்மிடையே ஒற்றுமையும் கிடையாது என்பதால் நம் சமுதாயத்தை அரசியல் கட்சிகள் மதிப்பளித்து உரிய அங்கீகாரம் வழங்குவது இல்லை.

நமக்கு சரியான அந்தஸ்து வேண்டுமெனில் நம்மிடையே நல்ல ஒற்றுமை ஏற்படுத்த வேண்டும். அதற்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு குலம் வாரியாக செய்தாக வேண்டும். அப்போதுதான் நம் சமுதாய மக்கள் தொகைக்கு ஏற்ப, உரிய செயலாக்கத்தை வகுத்து செயல்பட முடியும்.

நம் சமுதாய மக்கள் கல்வி, தொழில், பொருளாதாரம், அரசியல் ஆகிய நிலைகளில் எந்த அளவிற்கு வளர்ச்சிபெற்று உள்ளார்கள் என்பதை அறிந்தும், அதற்கு ஏற்றாற்போல திட்டங்கள் வகுத்து நம் சமுதாய மக்களின் முன்னேற்றத்திற்கு பாடுபடமுடியும்.

நமக்கு நாமே வளமான திட்டங்களை வகுத்து சமுதாய ஒற்றுமைக்கும் வளர்ச்சிக்கும் பாடுபட, நீங்கள் அனைவரும் உறவுப்பாலத்தில் தங்களின் விபரங்களை, மக்கள் தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்து பயன் பெற வாழ்த்துகிறேன்.

உங்களின் சேவையில்,
உதகை செங்குட்டுவன்