நம்மிடையே அதிகப்படியான சமுதாயஅமைப்புகள் ஏன்?

சொந்தங்களுக்கு இனிய வணக்கங்கள்…

இன்றைய நாளில், நம் சமுதாயத்திற்கு சேவை செய்ய பல்வேறு அமைப்புகள் உருவாகியுள்ளன! அதில் ஒருசில அமைப்புகள், தங்களின் பதிவுகளை முறையாக புதுப்பிக்கவும் இல்லை என்பது உண்மையே!

பதிவு செய்யப்பட்ட பல அமைப்புகள், தொடர்ந்து செயல்படவில்லை, அந்த அமைப்பின் பெயரை நம்சமுதாய சொந்தங்கள் இன்றும் பலர் பயன்படுத்தி வருகின்றனர். மேலும், அவர்களால் நம் சமுதாயத்திற்கு என்ன பயன் என்றால், குறிப்பாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

காரணம், நம்சமுதாயத்திற்கு ஒரு அடிப்படை கட்டமைப்பு இல்லை. அதனால் ஒருவரை ஒருவர் தொடர்பு கொள்ளவோ, புரிந்துகொள்ளவோ வாய்ப்பில்லை. அத்தனை அமைப்புகளின் மீதும் நம்சமுதாய மக்களுக்கு நம்பிக்கை இல்லை, ஆதரவும் இல்லை. இதுவே நிதர்சனமான உண்மை.

பழங்குடியினர் சான்றிதழ் பெற்றவர்கள் ஒருபுறம், பழங்குடியினர் சான்றிதழ் பெறாதவர்கள் ஒருபுறம், இதைப்பற்றி ஒன்றுமே அறியாதவர்கள் ஒருபுறம். மாவட்டம் வாரியாக அமைப்புகள்! மாநில வாரியாக அமைப்புகள்! எல்லாம் இரட்டை அமைப்புகள்! இந்த அமைப்புகள் அனைத்தும் நம் சமுதாய ஒற்றுமையை கேள்விக்குறியாக்கிவிட்டனர்.

பெரும்பாலான நம்சமுதாய அமைப்புகள் பழங்குடியினர் சான்றிதழ் அனைவருக்கும் எளிமையாக கிடைக்கச்செய்தால், அதுவே நம்சமுதாயத்திற்கு செய்யும் முக்கிய சேவையென கருதுகின்றனர்.

அந்த ஒரு கோரிக்கையை மட்டும் கையில் எடுத்து, நாற்பது ஆண்டுகளை வீணடித்து விட்டனர். அது மட்டுமே நம்சமுதாயத்திற்கு செய்யும் சேவை ஆகாது. நம் சமுதாயத்திற்கு பல்வேறு சேவைகள் செய்ய வேண்டியுள்ளது.

இந்த சூழ்நிலையை நாம் மாற்றியாகவேண்டும் என்றால்,  ஏற்கனவே உள்ள அமைப்பின் பொறுப்பாளர்கள் ஒருவரையொருவர் விமர்சனம் செய்வதை முதலில் தவிர்க்க வேண்டும்.

ஒரு புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது என்றால், அது யாரால் துவக்கப்பட்டது? அதன் நோக்கம் யாது? அதன் செயல் திட்டங்கள் என்ன? சொல்லப்படும் செயல்திட்டங்கள் அனைத்தும் சாத்தியமானவையா? அல்லது நடைமுறைக்கு ஒத்து வராததா? என அனைத்து சொந்தங்களும் சிந்தித்து, சீர்தூக்கி பார்க்க வேண்டும்.  அப்போதுதான் நம்மிடையே ஒருமித்த கருத்தும், ஒற்றுமையும் உருவாக்க வழி பிறக்கும்.

சொந்தங்கள் அனைவரும், மக்கள் கணக்கெடுப்பு பகுதியில் தங்கள் பெயர் விபரங்களை குலம், குலதெய்வம் உட்பட பதிவு செய்யவும். உங்களை நாங்கள் தொடர்பு கொள்வோம். அனைவரும் ஒன்றுபடுவோம், புதியதோர் சகாப்தம் படைப்போம்.

வாழ்த்துக்கள்.

உங்கள் சேவையில்…

உங்கள் அன்பிற்குரிய,

உதகை செங்குட்டுவன்